புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவரிடம்
பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் ஒருவன் பெயர்
"முட்டாள்". அதனால் அவனை மற்ற மாணவர்கள் "முட்டாளே இங்கே வா!
முட்டாளே இதைச் செய்!" என்று கேலி செய்தனர்.
தன் பெயரே தன்னைக் கேலிக்கு உள்ளாக்குகிறதே" என்று
வருந்தினான்.
ஆசிரியரை வணங்கிய அவன், "ஐயா, எனக்கு ஒரு நல்ல பெயராக நீங்கள்
வைக்க வேண்டும். எல்லோரும் மதிக்கும் பெயராக அது இருக்க
வேண்டும்." என்று வேண்டினான்.
"நீ இங்கிருந்து புறப்பட்டு பல ஊர்களுக்கும் சென்று வா. எந்தப்
பெயர் உனக்குப் பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து வந்து சொல்.
அந்தப் பெயரையே உனக்கு வைத்து விடுகிறேன்" என்றார் அவர்.
அங்கிருந்து புறப்பட்ட அவனும் ஒவ்வொரு ஊராகச் சென்று
கொண்டிருந்தான்.
வழியில் சிலர் சுடுகாட்டிற்குப் பிணம் ஒன்றைத் தூக்கிச் சென்று
கொண்டிருந்தனர். இறந்தவனைப் பற்றி விசாரித்தான் முட்டாள்.
இறந்தவன் பெயர் தேவன் என்று தெரிந்து கொண்டான்.
"தேவன் எப்படிச் சாவான்?"என்று கேட்டான் அவன்.
"தேவன் என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். சாவு என்ற
பெயருடையவனும் இறந்து விட்டான். பெயரில் என்ன உள்ளது? ஒருவனை
அடையாளம் காட்டுவதுதான் பெயர். இது தெரியாமல் என்னிடம் கேள்வி
கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று எரிச்சலுடன் பதில்
சொன்னான் ஒருவன்.
இன்னொரு ஊரை அடைந்தான் அவன். ஒரு வீட்டின் முன் நின்று,"அம்மா,
தாகமாக உள்ளது குடிக்கத் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான்.
"தண்ணீரெல்லாம் தர முடியாது... இங்கிருந்து போ..." என்று
விரட்டினாள் அந்த வீட்டிலிருந்தவள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் பெயர் காவேரி என்று தெரிந்து
கொண்டான்.
அங்கிருந்து சென்ற அவன் நான்கு சாலை சந்திப்பை அடைந்தான்.
எதிரி வந்த ஒருவரிடம்,"அய்யா, பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு
எப்படி செல்வது/" என்று விசாரித்தான்.
அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
உங்கள் பெயர் என்ன? என்றான்
அவர் "வழிகாட்டி" என்றார்.
இன்னொரு இடத்தில் ஒரு பெண்ணை அவள் தாய் அடித்துத்
துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
"ஏனம்மா அந்தச் சிறுமியை அடிக்கிறீர்கள்?'
"வேலைக்குச் சென்ற அவள் வேலை எதுவும் கிடைக்காமல்
வெறுங்கையுடன் திரும்பி உள்ளாள். இன்று சாப்பாட்டிற்கு என்ன
செய்வோம்? அதனால்தான் அடிக்கிறேன்."என்றாள் அவள்.
"உங்களின் மகளின் பெயர் என்ன" என்று கேட்டான்.
"திருமகள்" என்றாள் அவள்.
ஊர் திரும்பிய அவன் தன் ஆசிரியரை வணங்கினான்.
"என்ன பெயரித் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார்
ஆசிரியர்.
"தேவன் என்ற பெயருடையவனால் சாவிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
தாகத்திற்கு தண்னீர் தர மறுப்பவளின் பெயர் காவேரி. வழிகாட்ட
முடியாதவனின் பெயர் வழிகாட்டி. வறுமையில் வாடுபவளின் பெயர்
திருமகள். பெயர் ஒருவரை அடையாளம் காட்டும் குறியீடுதான். மற்ற
பெயர்களுக்கு முட்டாள் என்கிற என்னுடைய பெயரே நன்றாக
இருக்கிறது" என்றான் அவன்.
எல்லோருக்கும் பெயருக்கு ஏற்றபடியா செயல்பாடுகள் இருக்கிறது?
அவனும் சந்தோசப்பட்டான். ஆனால்...?
முளைவிட்ட பயிரை மண்
பார்த்தது. கிட்டத்தட்ட ஒரு தாயின் பெருமிதம். "இது
என்னால்தான்" என்று ஆனந்தப்பட்டுக் கொண்டது.
அந்தக் குட்டிப் பயிரை நீர் கண்டது. "நான்...நான்...இல்லை,
இல்லை... இது வளர்ந்தது என்னால்தான்..." மகிழ்ச்சியில் அதன்
இமையோரம் ஈரம் கசிந்தது.
அந்தப் பயிரை வாரி எடுத்து உச்சி முகர விரும்புவது போல்
கதிரவன் தன் கிரணங்களால் அவற்றைத் தழுவினான். "என் வெப்பத்தின்
சம்பவமே நீ எனச் சொல்லிப் புன்னகைத்தான்"
"நல்ல பருவத்தில் நல்ல விதைகளை நான் விதைத்ததால்தான் பயிர்
வளர்ந்துள்ளது" விதைத்த மனிதன் களிப்பெய்தினான்.
"என் பிறப்பில் வளர்ச்சியில் இவ்வளவு போட்டா போட்டியா?
சச்சரவா? இதில் நான் பெருமைப்பட ஒன்றிமில்லையா?" இளம் பயிர்
மனம் வாடியது.
துவண்ட பயிரைக் கண்டு மண் துடித்தது. "என் மடியிலா இப்படி ஒரு
வாட்டம் மாட்டேன். உன்னை வாட விட மாட்டேன்" தன் மடியை
விரித்துப் பயிரை மேலும் ஆறுதலாக அணைத்துக் கொண்டது.
"நான் அமுதூட்டிய பயிர் வாடுவதா?" நீர் வருந்தியது. பயிரை
இறுகத் தழுவியது. "ஊருக்கே உலகுக்கே உயிர் ஊட்டுபவன் நான்
ஸ்பரிசித்த உனக்கு ஊறு ஏற்படுவதா? பயிரே வாடாதே உனக்கு
வேண்டியதை நான் தருகிறேன்." சூரியன் சொன்னான்.
பயிர் எல்லோரையும் கேட்டது. அதற்குப் பேரானந்தம். "என்
வளர்ச்சியில் இவ்வளவு பேருக்கு அக்கறையா?"
அதன் உள்ளம் உவகையில் துள்ளியது. உள்ளத்து மகிழ்ச்சி உடலிலும்
பரவி அதைப் பரவசப்படுத்தியது.
மனிதன் பயிரைப் பார்த்தான்."ஆஹா, இந்தப் பயிர் எப்படி
தளதளவென்று வளர்ந்து விட்டது?" அவனுக்குள் பெரும் களிப்பு.
மறுநாள் அந்தப் பயிரைப் பிடுங்கித் தின்றான்.
ராமாயண சொற்பொழிவில் கும்பகர்ணன்கள்
ராமருக்கும் கும்பகர்ணனுக்கும்
யுத்தம் நடந்தது.
அப்பொழுது கும்பகர்ணன் ராமரைப்
பார்த்து, "ராமா இந்தப் போரில் நான் இறப்பதும், நீ வெற்றி
பெறுவதும் உறுதி. அப்படியிருக்கும் போது நமக்குப் பின்னால்
வரக்கூடிய சந்ததியினர் உன்னைப் பற்றியும் ராவணனைப் பற்றியும்
பெருமையாகப் பேசுவார்களே தவிர என்னைப் பற்றி நினைக்கக் கூட
வகையில்லாமல் போய்விடும்." என்று சொல்லி வருந்தினான்.
அதற்கு," வருந்தாதே கும்பகர்ணா எங்களைப் பற்றிப் பேசும்
இடங்களிலெல்லாம் உன்னைப் பற்றியும் பத்து பேராவது
நினைக்கும்படி செய்து விடுகிறேன்." என்றார் ராமர்.
அதன் விளைவுதான் ராமாயணம் நடக்கும் இடங்களிலெல்லாம் குறைந்தது
பத்து பேராவது கும்பகர்ணனை நினைத்து(தூங்கி)க்
கொண்டிருக்கிறார்கள்.
அம்பிகையை வணங்காத முனிவர்
பிருங்கிரிஷி என்ற முனிவர்
தவவலிமையால் பல சிறப்புகளைப் பெற்றிருந்தார். இம்முனிவருக்கு
சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி இருந்தது. சிவபக்தரான
இவருக்கு அம்பிகையை வணங்குவதில் விருப்பமில்லை. மேலும் இவர்
அம்பிகையை வணங்குவதில்லை என்கிற உறுதியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அம்பிகையை உதாசீனப்படுத்தும் நோக்கத்துடனும்
நடந்து வந்தார்.
ஒருநாள் சிவபெருமான்
அம்பிகையோடு தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது
பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானைத் தரிசிக்கச் சென்றார்.
சிவபெருமானும், பார்வதியும்
ஒன்றாக இருப்பதைப் பார்த்த முனிவர் சிவபெருமானை மட்டும் வழிபட
வேண்டுமென்று நினைத்தார். ஆனால், இரண்டு பேரும் ஒட்டி அமர்ந்து
கொண்டிருந்ததால் அப்போது சிவபெருமானை வணங்கினால் அம்பிகையையும்
சேர்த்து வணங்கியது போல் ஆகிவிடும்.
ஒரு போதும் அம்பிகையை எந்தக்
காரணம் கொண்டும் வணங்கி விடக்கூடாது என்பதில் பிருங்கிரிஷி
முனிவர் தனது முடிவில் நிலையாக இருந்தார்.
ஆனால் இவ்வளவு தூரம் வந்து
விட்டோம் சிவபெருமானைத் தரிசிக்காமல் செல்வதா? என்று
யோசித்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு அவருடைய மனதில் வழி
தெரிந்தது. அதைச் செயல்படுத்தத் துவங்கினார்.
ஒரு வண்டின் உருவத்தில்
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் இருந்த சிறு
இடைவெளியில் திடீரென்று சிவபெருமானை மட்டும் வலம் வந்து
தரிசித்தார்.
இதைக் கண்ட அம்பிகைக்குப்
பயங்கர கோபம் ஏற்பட்டது. சிவபெருமானை மட்டும் வணங்கிய
பிருங்கிரிஷி முனிவர், சிவபெருமானின் மனைவியான தன்னை
வணங்கவில்லையே என்று ஆத்திரம் கொண்டாள். முனிவருக்குச் சரியான
பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினாள். சக்தியின் வடிவமான
தன்னை பிருங்கிரிஷி முனிவர் அவமதித்து விட்டதால், அவர் உடலில்
இருந்த சக்தியை மட்டும் எடுத்துக் கொண்டாள். இதனால் கை, கால்,
உடல் என அனைத்துப் பகுதிகளும் செயல் இழந்து, உணர்விழந்து தனது
சக்தியையும் இழந்து முனிவர் கீழே விழுந்தார்.
தன்னைத் தவறாமல் வணங்கும்
பக்தன் இப்படி சக்தி இழந்து கிடக்கிறானே என்று கருதிய
சிவபெருமான், பிருங்கிரிஷி முனிவரைக் காப்பாற்றும் முயற்சியில்
ஈடுபட்டார். அதற்காகத் தனது மூன்றாவது காலைக் கொடுத்துக்
கையில் தடி ஒன்றும் அளித்தார். பின்னர் சிவமும் சக்தியும்
பிரிக்க முடியாத ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக அவருக்கு
அர்த்த நாரீசுவர தரிசனம் அளித்தார்.
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
முன்பொரு காலத்தில் பகாரா
நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு
அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே
அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.
"ஒன்றுமே செய்ய முடியவில்லையே
என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன்.
"என்ன செய்ய
முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர்.
"எனக்கோர் விஷயம் தெரியும்.
அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன்.
"அது என்ன?" என்றார்கள்.
"எனக்கு தங்கம் விளைவிக்கத்
தெரியும். அது இந்த உல்கில் வேறு எவருக்கும் தெரியாது."
என்றான்
இதைக் கேட்டதும் தூக்குத்
தண்டனை நிறுத்தப்பட்டது. காவலர்கள் அரசனிடம் சென்று
இவிஷ்யத்தைக் கூறினார்கள். உட்னே அரச்ன் அம்மனிதனை அழைத்தான்.
உனக்குத் தங்கம் விளைவிக்கத்
தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் கொடு. அப்புறம் உன்னை
விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் அரசன்.
குற்றவாளியான அம்மனிதன்
இதற்குச் சம்மதித்து நிலத்தை உழுது விதைப்பதற்குத் தங்கமும்
கொண்டு வரச் செய்தான்.
பின்பு,"அரசே! விதைப்பதற்கு
எல்லாம் தயாராகி விட்டது. இப்பொழுது கூறுங்கள் யார் தங்கத்தை
விதைக்கப் போவது? உண்மையும், நேர்மையும் உள்ள வாழ்க்கையில்
ஒருமுறை கூட திருடாத ஒருவர்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்.
நான் என் வாழ்க்கையில் திருடியதே கிடையாது. ஆனால் என்னைத்
திருடன் என்று கூறிவிட்டனர். எனவே நான் விதைக்க முடியாது. ஆகவே
யார் விதைக்கப் போகிறார்கள்?" என்றான் அவன்.
"அப்படியானால் நம்
முதலமைச்சர் விதைக்கட்டும்" என்றான் அரசன்.
"இல்லையில்லை... நான் விதைக்க
முடியாத நிலையில் இருக்கிறேன்." என்றார் முதலமைச்சர்.
அப்படியானால் நம்து
பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் விதைக்கட்டும் என்றான்
அரசன்.
"நானா?... நான் பொருத்தமானவன்
என்று சொல்வதற்கில்லை..." என்றார் அந்த நீதிபதி.
அரண்மனியிலிருந்த அத்தனை
பேரையும் ஒருவர் பின் ஒருவராக அரசன் அழைத்ததும் யாரும் அதற்கு
முன்வரவில்லை.
அப்பொழுது ஒரு குரல் வந்தது.
"அரசர் பெருமானே! தாங்கள்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்."
"என்னால் இக்காரியம்
கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது." என்றான் அரசன்.
"அரசே! உங்கள் அரண்மனையில்
ஒருவர் கூட நேர்மையானவர் இல்லையா? அப்படியிருக்க என் வாழ்வில்
திருட்டைப் பற்றியே அறியாத எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பது
எவ்வகையில் நியாயம்?" என்றான் குற்றவாளி.
அரசனுக்கு அப்போதுதான் தனது
தவறு தெரிந்தது. அவனை விசாரிக்காமலேயே தூக்குத் தண்டனை கொடுத்த
தனக்கு சரியான பாடம் புகட்டிய அவனது புத்திக்கூர்மைக்குப் பல
பரிசுகளை அளித்து அவனை விடுதலை செய்தான்.
அழகி லைலாவிற்கு குதிரை மேல ஆசை
அரபு நாட்டில் இருந்த அஹமது
என்கிற ஒரு பெரியார் இருந்தார். அவரிடம் ஓர் அழகிய குதிரை
இருந்தது. அந்தக் குதிரையின் அழகில் கவரப்பட்ட பலர் அதற்கு
எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராயிருந்தனர்.
ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை அள்ளிக் கொடுக்கப் பலரும் முன்
வந்தனர். ஆனால் அந்தப் பெரியவர் அதை விற்க முன்வரவில்லை.
அந்த அரபு நாட்டில் லைலா எனும்
அழகிய மங்கை ஒருத்தியும் இருந்தாள். அவளை திருமணம் செய்து
கொள்ள பல பணக்கார இளைஞர்களும் விரும்பினர். ஆனால், அவள் தன்னை
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களில் அந்தப் பெரியவரிடம்
இருக்கும் அழகான குதிரையைத் தனக்கு நன்கொடையாகக் கொண்டு வந்து
தருபவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத்
தெரிவித்தாள்.
அந்த லைலாவை விரும்பியவர்களுள்
காசிம் என்பவனும் ஒருவன். அவன் அந்தப் பெரியாரிடம் சென்று
தனக்கு அந்த அழகான குதிரையை விலைக்குத் தரும்படி கேட்டான்.
ஆனால் அந்தப் பெரியவர் அந்தக் குதிரையைத் தர மறுத்துவிட்டார்.
அவனும் தினசரி அந்தப் பெரியவரிடம் கெஞ்சிக் கேட்டான். ஆனால்
அவர் மறுத்து விட்டார். காசிம் பல நாட்கள் அவர் வீட்டுக்குச்
சென்று பல வழிகளில் கேட்டும் அவர் அந்தக் குதிரையைக்
கொடுப்பதாக இல்லை.
கடைசியாக காசிம் ஒரு யோசனை
செய்தான். அந்தப் பெரியவர் தினசரி குதிரையில் சவாரி
செய்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு நீண்ட போர்வையால் தன்னை
முழுவதுமாக மறைத்துக் கொண்டு ஒரு நோயாளியைப் போல் முக்கி
முனகிக் கொண்டே படுத்துக் கிடந்தான்.
அவன் அப்படிக் கிடப்பதைப்
பார்த்த அந்தப் பெரியவர் உனக்கு உடல்நிலை சரியில்லையா? என்று
விசாரித்தார். உடனே அவனும் தான் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும்,
நடக்க முடியாமல் இருப்பதாகவும் தன்னைப் பக்கத்தில் உள்ள
வைத்தியர் ஒருவர் வீட்டில் விட்டுவிடும்படியும் கெஞ்சிக்
கேட்டுக் கொண்டான்.
அந்தப் பெரியவரும் அவன் மேல்
இரக்கப்பட்டு அவனை அந்தக் குதிரையின் மேல் ஏற்றி குதிரையின்
கடிவாளத்தைப் பிடித்தபடி நடந்து சென்றார். சிறிது தூரம்
சென்றதும் குதிரை மேலிருந்த காசிம் தனது துணியில் பணத்தை
முடிந்து வைத்திருந்ததாகவும் அது சிறிது தொலைவிற்கு முன்னால்
விழுந்து விட்டதாகவும் அதை எடுத்து வந்து தரும்படியும்
கேட்டான். அதைக் கேட்ட பெரியவரும் கடிவாளத்தை விட்டுவிட்டு அதை
எடுத்து வருவதற்காகத் திரும்பினார்.
அவ்வளவுதான் கடிவாளத்தைப்
பற்றிக் கொண்டு குதிரையை விரட்டத் துவங்கினான். அத்துடன்
நிற்காமல் குதிரையை விலைக்குக் கேட்டேன் தரவில்லை. இப்பொழுது
குதிரையை என் யோசனையில் அடைந்து விட்டேன். என்று ஏளனமாகச்
சிரித்தான்.
உடனே அந்தப் பெரியவர், "தம்பி
ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுச் செல்." என்றார். உடனே அவனும்
" சரி, அங்கிருந்தே சொல்லுங்கள்..." என்றான்.
அந்தப் பெரியவர் உடனே,
"உன்னிடமிருந்து ஒரே ஒரு உறுதிமொழி மட்டும்தான்
எதிர்பார்க்கிறேன். அதை மட்டும் நீ செய்து விட்டால் எனக்கு
ஏற்பட்ட இழப்பைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டேன். அதாவது,
நீ எவரிடமும் இந்தக் குதிரையை என்னிடமிருந்து நயவஞ்சகத்தால்
அபகரித்துக் கொண்டதாகக் கூறாதே... அப்படிச் செய்வது
இஸ்லாத்தின் புனிதத்தன்மைக்குக் களங்கம் உண்டு பண்ணுவதாகும்."
என்றார்.
அந்தப் பெரியாருடைய
வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்ததுதான் தாமதம். உடனே
குதிரையிலிருந்து கீழே குதித்து அந்தப் பெரியவரிடம்
கடிவாளத்தைக் கொடுத்து "என்னை மன்னியுங்கள். நான் ஒரு போதும்
இஸ்லாத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இழி செயலைச்
செய்யமாட்டேன். இது சத்தியம் என்று கூறிவிட்டுத் தன் வழியில்
நடந்தான்.
இறந்தவன் திரும்பி வந்தான்
ஒரு பணக்கார மனிதனுக்கு இரண்டு
பிள்ளைகள் இருந்தனர். இந்த இரண்டு பிள்ளைகளில் இளைய மகன்
தந்தையை நோக்கி, "நமக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்திலும்
இரண்டாகப் பகிர்ந்து எனது பங்கை எனக்குத் தாருங்கள்" என்று
கூறினான். தந்தையும் ஒற்றுமையாக இருந்தால் இருக்கும் வளம்
மேலும் பெருகும். அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இருக்கும்படி
வலியுறுத்தினார். ஆனால் அவனோ அதைக் காதிலேயே வாங்கிக்
கொள்ளவில்லை.
தந்தையும் சில நாட்களில் தனது
அனைத்துச் சொத்துக்களையும் இரண்டாகப் பங்கிட்டு இருவரிடமும்
சமமாக வழங்கினார். சில நாட்கள் கழித்து இரண்டாவது மகன்
தனக்குக் கொடுத்த சொத்துக்களையெல்லாம் விற்றுப் பணமாக்கி அதை
எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். வேறொரு
தூரதேசத்திற்குப் பயணமானான்.
அங்கு அவன் பணத்தை மூடனைப்
போல் வீணாகச் செலவு செய்தான். கடைசியில் அவன் கொண்டு
வந்திருந்த பணம் முழுவதும் காலியாகி விட்டது. கையில்
பணமில்லாமல் பசியால் மிகவும் துன்பப்பட்டான்.
எனவே அந்நாட்டிலிருந்த
ஒருவனிடம் தனக்கு வேலை தரும்படி கேட்டான். அவனும் அவனை வேலக்கு
அமர்த்தினான். அவனுக்குப் பன்றிகளுக்குத் தீவனமிடும் வேலை
கொடுக்கப்பட்டது. அவனுக்கு உணவு தருவதற்கு யாரும் தயாராயில்லை.
அவன் பசி மிகுதியால் பன்றிகள் சாப்பிடும் உணவையாவது உண்ண
வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அந்த உணவும் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவனுக்குத்
தன்னுடைய மூடத்தனம் தெரிந்தது. தன் தந்தை வீட்டில் எவ்வளவு
பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பஞ்சமில்லாமல்
உணவு வழங்கப்படுகிறது. இங்கு தனது பங்கைப் பிரித்து வாங்கி
வந்து அந்தப் பணத்தையெல்லாம் மூடத்தனமாகச் செலவு செய்து விட்டு
இப்படி கஷ்டப்படுகிறோமே என்று வருந்தினான்.
தன் தந்தையிடம் சென்று
மன்னிப்பு கேட்டு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனைப் போல் வேலை
செய்தாவது நாம் பசியேயில்லாமல் வாழ்வோம் என்று முடிவு
செய்தான். உடன் தந்தை வீட்டை நோக்கிப் பயணம் செய்தான்.
தொலைவில் மகன் முகம் வாடி
பசியுடன் வருவதைப் பார்த்த அவன் தந்தை அவனை நோக்கி வேகமாக
ஓடினார். மகனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மகனும்
அழுதான். அப்பாவின் பேச்சைக் கேட்காமல் பிரிந்து சென்று
கஷ்டப்பட்டதைக் கூறி அழுதான். தன்னை வீட்டில் ஒரு
வேலைக்காரனாகவாவது வைத்துக் கொள்ளும்படி கெஞ்சினான். ஆனால்
அவன் தந்தை வேலைக்காரர்களை அழைத்து நல்ல விலையுயர்ந்த ஆடை
ஆபரணங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் செய்தான். வீட்டில் நல்ல
உணவைச் சமைக்கச் செய்தார். அங்கிருக்கும் வேலைக்காரர்கள்
அனவருக்கும் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்தார்.
மூத்த மகன் வயலில் இருந்து
திரும்பி வந்தான். வீட்டில் விருந்து நடப்பதைப் பார்த்து
வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து விசாரித்தான். அவனது சகோதரன்
திரும்பி வந்திருப்பதை அறிந்தான். தந்தையும் மகிழ்ச்சியாக
இருப்பதாக அறிந்தான். பங்கைப் பிரித்து வாங்கி வீட்டை விட்டு
வெளியேறிய மகனுக்குத் தடபுடலாக விருந்து நடப்பதை அறிந்து
வேதனையடைந்தான். அவன் தந்தை மேல் கோபமடைந்தான். வீட்டுக்குச்
செல்லாமல் அப்படியே திரும்பினான்.
இதையறிந்த தந்தை தனது மூத்த
மகனைத் தேடிச் சென்றார். எல்லா நேரங்களிலும் நீ என்னுடன்
இருக்கிறாய். உன்னுடைய பங்கிலுள்ள சொத்துக்கள் தவிர என்னுடைய
சொத்துக்கள் அனைத்தும் உனக்கே உரியது. நாம் சந்தோஷமாக உணவு
உண்ண வேண்டும். இறந்து போயிருந்த உன் சகோதரன் இன்று திரும்பி
வந்திருக்கிறான். திருந்தியும் வந்திருக்கிறான். அவனிடம் நாம்
காட்டும் அன்புதான் அவனை மீண்டும் மனிதனாக்கும். என்றார்.
மூத்த மகனும் தந்தை சொல்வதை சரியென்றபடி வீட்டுக்குத்
திரும்பினான்.
தம்பி அண்ணனைப் பார்த்து
கதறியழுதான். அண்ணனும் தன் தம்பியைக் கட்டிப்பிடித்து இனியாவது
நல்லவனாக நடந்து கொள் என்றான்.
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
ஒரு அரசனின் பஞசனையில் மந்த
விசர்ப்பணி என்கிற சீலைப் பேன் ஒன்று வசித்து வந்தது.
இந்த பஞ்சனைக்கு ஒரு மூட்டைப்
பூச்சி எப்படியோ வந்து சேர்ந்தது. இதைப் பார்த்த சீலைப்
பேனுக்கு பயமாகி விட்டது.
" நீ எப்படி இங்கே வந்தாய்?
இங்கிருந்து போய் விடு" என்றது அந்த சீலைப் பேன்.
"இந்த ராஜாவின் பஞ்சனை உனக்கு
மட்டுமா சொந்தம்? மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம். அவருடைய
பஞ்சனையை நீ மட்டும் சொந்தம் கொண்டாடுவதா? நான் போக முடியாது."
என்று மறுத்தது அந்த மூட்டைப் பூச்சி.
" நீ பொல்லாதவன். முட்களைப்
போன்ற உன் பற்களால் தூங்குவதற்கு முன்பே கடிப்பவன். சமய
சந்தர்ப்பம் தெரியாத நீ இந்த ராஜாவின் படுக்கையில் இருக்கத்
தகுதி உடையவனல்ல. இந்த இடத்தை விட்டு உடனே போய் விடு. " என்று
சீலைப்பேன் சொல்லியது. அதற்கல்லவா தெரியும் பக்குவமாக அந்தப்
பஞ்சனையில் நாளைத் தள்ளி வருவதில் உள்ள சிரமம்.
ஆனால் கெட்டிக்கார மூட்டைப்
பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு," நான் இங்கே
அப்படி செய்ய மாட்டேன். நீ சொன்னபடியெல்லாம் கேட்பேன். என்னை
இங்கிருக்க அனுமதிக்க வேண்டும." என்று கெஞ்சியது. அரசனுடைய
ரத்தம் அதற்கு உணவாகக் கிடைக்கும் போது காலைப் பிடித்துக்
கெஞ்சுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டது அந்த
மூட்டைப் பூச்சி.
காலைப் பிடித்து கெஞ்சிக்
கேட்டதால் கடுமையாகப் பேச முடியாத சீலைப் பேன் தன் நிலையில்
இருந்து சற்று இறங்கி வந்தது.
"அரசர் உடலில் வெடுக்கென்று
கடிக்கக் கூடாது. அவர் தூங்கிய பின்பு அவருக்கு வலி ஏற்படாமல்
கடிக்க வேண்டும். அளவாக ரத்தம் குடிக்க வேண்டும்" என்று சில
நிபந்தனைகளை விதித்து அங்கே தங்கிக் கொள்ள அனுமதித்தது.
இரவு நேரமாகி விட்டதால் அரசர்
களைப்புடன் பஞ்சனையில் வந்து படுத்தார். சில நிமிடங்கள் கூட
ஆகியிருக்காது. அந்த மூட்டைப் பூச்சி அரசனின் இரத்தத்தைக்
குடிக்கும் ஆர்வத்துடன் நறுக்கென்று கடித்தது.
தன்னை ஏதோ ஒன்று கடிப்பதை
உணர்ந்த அரசன் திடுக்கிட்டு எழுந்து சேவகர்களை அழைத்தான்.
சேவகர்களிடம் இந்தப் பஞ்சனையில் ஏதோ ஒன்று கடிப்பது
போலிருக்கிறது பாருங்கள் என்று கட்டளையிட்டான்.
அவர்கள் பஞ்சனை முழுவதும்
தேடினார்கள். மூட்டைப் பூச்சி வேகமாகக் கட்டிலின்
இடுக்கிற்குள் சென்று மறைந்து கொண்டது. சீலைப் பேன் போர்வையில்
ஒட்டிக் கொண்டிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டு
நசுக்கப்பட்டது.
தகுதியில்லாதவருக்கு அளிக்கும்
அடைக்கலம் தனக்குத்தான் ஆபத்தைத் தரும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டும்.
-பஞ்சதந்திரக்கதை.
துறவிகள் ஒட்டுக் கேட்கலாமா?
துறவி ஒருவர் காட்டு வழியே
நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு களைப்பு அதிகமாக இருக்க
அந்தக் காட்டிலேயே படுத்து விட்டார். தனது கைகளைத் தலைக்குத்
தலையணை போல் வைத்துக் கொண்டார்.
அந்தக் காட்டின் வழியே இரண்டு
பெண்கள் வந்தார்கள்.
அவர்களில் ஒருத்தி, "இங்கே
பார் இந்தக் காட்டில் வெறும் கோவணத்துடன் ஒருவர்
படுத்திருக்கிறார். இவர் முற்றும் துறந்த துறவியாகத்தான்
இருக்க வேண்டும்." என்றாள்.
" இவள் துறவியே இல்லை. துறவி
வேடத்தில் இருப்பவர்" என்றாள் மற்றவள்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட
துறவி படுத்தபடியே அடுத்து என்ன பேசுகிறார்கள்? என்று
கவனிக்கத் துவங்கினார்.
"அவள் உணமையான துறவி இல்லை
என்று எதை வைத்துச் சொல்கிறாய்?"
"கைகளைத் தலையணை போல் வைத்துப்
படுத்திருக்கிறாரே. உடல் இன்பம் இன்னும் அவரை விட்டு
நீங்கவில்லை. அதனால்தான் சொல்கிறேன்."
துறவிக்கும் இரண்டாமவள்
சொன்னது சரியென்று பட்டதால் தன் தலைக்கு வைத்திருந்த கைகளை
எடுத்துவிட்டு அங்கேயே படுத்துக் கிடந்தார்.
சிறிது நேரம் கழித்து அதே
பெண்கள் தங்கள் வேலையை முடித்து விட்டு அந்த வழியிலேயே
திரும்பி வந்தார்கள்.
"தற்போது பார்த்தாயா?
தலைக்குத் தலையணை போல் வைத்திருந்த கையை எடுத்துப்
படுத்திருக்கிறார். இப்போதாவது இவரை துறவி என்று ஏற்றுக்
கொள்கிறாயா? என்று கேட்டாள்.
"இப்போது அவரைத் துறவியாக
ஏற்றுக் கொள்ள முடியாது"
"ஏன்?"
"உண்மையான துறவியர் பிறர்
தங்களைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அதைப் பொருட்படுத்த
மாட்டார்கள். ஆனால் இவரோ நாம் பேசிக் கொண்டதைக் கேட்டுத்
தம்மைத் திருத்திக் கொண்டார். இப்பொழுதும் நாம் அவரைப்
புகழ்ந்து பேசுகிறோமா? என்று கவனிக்க்கிறார். இவரைத் துறவி
என்று எப்படி சொல்வது?"
தான் மட்டும்தான் என்கிற கர்வம்
பாண்டவர்களின் பட்டத்து
ராணியான திரௌபதி சிறந்த கிருஷ்ண பக்தை. அவள் கிருஷ்ணரைப்
பூஜித்து வந்தாள். கிருஷ்ணரும் அவளின் பக்திக்குக்
கட்டுப்பட்டு இருந்தார். ஆனால் திரௌபதிக்கு கிருஷ்ணரின் மேல்
கொண்டிருந்த பக்தியில் கர்வம் ஏற்பட்டது. அதாவது கிருஷ்ணர்
அவளுடைய பக்தியை அதிகமாக நேசிப்பதாகவும், அவளும் கிருஷ்ணரை
அதிகமான பக்தியில் வைத்திருப்பதாகவும் நினைத்துக் கொண்டாள்.
இந்தக் கர்வத்தை அவளிடமிருந்து
அகற்ற வேண்டுமென்று விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.
ஒரு நாள் திரௌபதிக்கு
சுடுநீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆகவே தன்
பணிப்பெண்களிடம் நீரைச் சுடவைக்கும்படி கூறினாள். நெருப்பு
போட்டு சுட வைத்தாள் பணிப்பெண். வெகுநேரமாகியும் நீர்
சூடாகவேயில்லை. இதைப் பார்த்த பீமன் தண்ணீரைச் சுடவைக்க
அங்கிருந்த காட்டில் பாதியை வெட்டிக் கொடுத்து விட்டான்.
அத்தனை விறகும் எரிக்கப்பட்ட பின்பும் தண்ணீர் மட்டும் சூடாகவே
இல்லை.
இதைப் பார்த்த திரௌபதி
கிருஷ்ணரை நினைத்துப் பிரார்த்தனை செய்தாள்.
இந்த தண்ணீர் இவ்வளவு விறகுகளை
எரித்தும் சூடாகாமல் இருக்கிறதே என்று கேட்டாள்.
அதற்கு கிருஷ்ணர், "நீ
சூடுபடுத்த வேண்டுமென்று தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில் ஒரு
தவளை இருக்கிறது. அது என்னை நோக்கி தண்ணீரைச் சூடாகாமல்
பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு உன்னுடையது என்று பக்தியோடு
என்னை வேண்டிக் கொண்டது. என்னுடைய படைப்புகள் என்னை நோக்கி
அபயக் குரலிடும் போது அவற்றையும் காக்க வேண்டிய கடமை
என்னுடையதாகி விடுகிறது. எனவே நான் அந்தத் தண்ணீர் சூடாகாமல்
இருக்கச் செய்தேன்." என்றார்.
அப்பொழுதுதான் திரௌபதிக்கு
தான் மட்டும்தான் கிருஷ்ணரிடம் அதிக பக்தியோடு இருக்கிறோம்
என்கிற கர்வம் நீங்கியது. இதற்காக கிருஷ்ணரிடம் மன்னிப்பும்
கேட்டாள்.
நீ சிங்கம் என்று சொல்ல வேண்டும்.
உலகின் தலைச்சிறந்த காவல்காரர்
யார் என்பதைத் தேர்வு செய்வதற்காக போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
அதில் உலகின் பெயர்பெற்ற அனைத்து நாட்டு காவலர்களும் கலந்து
கொண்டனர். முதல் சுற்றுப் போட்டியில் உலகின் தலைச்சிறந்த
காவல்காரர்கள் என்று ஸ்காட்லாந்து, அமெரிக்கா மற்றும்
இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு காவலர்களும் தேர்வு
செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டப் போட்டியில்
ஒரு சிங்கத்தைக் காட்டிற்குள் விட்டு விடுவது என்றும்
காட்டிற்குள் இருந்து அந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு
வரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
போட்டி துவங்கியது.
முதலாவதாக ஸ்காட்லாந்து
காவலர்கள் அந்த சிங்கத்தைக் கொண்டு வர அனுப்பப்பட்டனர்.
காட்டிற்குள் சென்ற அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அந்த
சிங்கத்தைப் பிடித்துக் கொண்டு வந்தனர்.
அடுத்து அமெரிக்கக் காவலர்கள்
காட்டிற்குள் சென்றனர். உள்ளே சென்ற அவர்கள் ஒரு நாள்
முழுவதும் தேடி மறுநாள் அந்த சிங்கத்தைப் பிடித்துக் கொண்டு
வந்தனர்.
கடைசியாக இந்தியாவின் சார்பில்
தமிழ்நாடு காவலர்கள் காட்டிற்குள் கொண்டு சென்றனர். உள்ளே
சென்ற காவலர்கள் ஒரு வாரமாகியும் வராததால் போட்டி
ஏற்பாட்டாளர்கள் பயந்து போய் விட்டனர். காட்டிற்குள்
அனுப்பப்பட்ட சிங்கம் தமிழ்நாடு காவலர்களை அடித்துக் கொன்று
விட்டதோ என்கிற அச்சத்துடன் போட்டி ஏற்பாட்டாளர்கள் தகுந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு காட்டிற்குள் சென்றனர்.
அங்கே போட்டியாளர்கள்
நினைத்தபடி விபரீதம் ஏதும் நடக்கவில்லை.
காட்டிற்குள் ஒரு மரத்தில்
கரடி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்தக்கரடியை தமிழ்நாடு
காவலர்கள் அடித்துக் கொண்டே "உன்னைக் கரடி என்று சொல்லாதே...
நீ கரடியில்லை... அங்கே வந்து நீ சிங்கம் என்று சொல்ல
வேண்டும். நீதான் சிங்கம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்."
என்று அதைத் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
கரடியைக் கூட சிங்கம் என்று
சொல்ல வைக்கும் தமிழ்நாடு காவலர்களின் செயலைப் பார்த்து
போட்டியாளர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.
( மேடைப்பேச்சு ஒன்றில்
கேட்ட கதை)
அனுமனா இல்லை அர்ச்சுணனா?
தன்
சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப்
பிரயோகிக்க மனமின்றி, சற்று மயக்கமுறச்செய்யும் பாசுபத
அஸ்திரத்தை தேடிக்கொண்டு வர கிளம்பினான் அர்ச்சுனன்.
போகிற வழியில் அனுமன் தவம் செய்து கொண்டிருப்பதைக்
கண்டார்.
அவரிடம் நக்கலாக, "உங்கள் இராமர் பெரிய வில்லாளி
ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம்
கட்டமுடியுமே... ஏன் குரங்குப் படையை வைத்து கற்களால்
கட்டினார்?" என்றான்.
அர்ச்சுனின் கர்வத்தை அடக்க வேண்டும் என்ற கோபம்
அனுமனுக்கு உண்டாயிற்று.
"அம்பாலான பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால்
சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்" என்றார்
அனுமன்.
அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படி மட்டும் நடந்தால்,
இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக்
கொள்வேன்" என சூளுரைத்தார்.
"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது
போர்க்கொடியில் இருந்து கொண்டு, என் வாழ்நாள்
முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன்" என்றார் அனுமன்.
உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம்
உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனை கோடி பேரையும்
தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.
அனுமன் "ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர்
உருவம் வளரத் தொடங்கியது... பெரும் உருவம் கொண்ட
அனுமன் பாலத்தின் மீது கால் வைத்தார்.
அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப் போனது...
அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்து
விட்டதே என்ற துக்கம் தாங்க முடியவில்லை.
வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத் தொடங்கினார்.
"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம்
பந்தயம் கட்டி உயிரை விடப் போகின்றேனே... என் அண்ணனின்
நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால்
மதிமயங்கிப் போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப்
போகிறேன்" என்று கலங்கினார்.
வேள்வித்தீக்குள் அர்ச்சுனன் குதிக்க முற்பட்டபோது,
"என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.
பார்த்தால் ஒரு அந்தணன் நின்று கொண்டிருந்தான்.
அவர்களுக்கிடையிலான பந்தயத்தைப் பற்றி சொன்னார்
அர்ச்சுனன்.
"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர்
இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்? இப்பொழுது நான்
நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும்
தொடங்குங்கள்"
போட்டி மீண்டும் தொடங்கியது.
தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாகப் பயன்படுத்த
வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை
தியானித்துக் கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான
பாலம் கட்டினார்.
அனுமன் கவலையே படவில்லை. தன் பலம்பற்றி தனக்கே தெரியாத
சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன்
கர்வம் வந்திருந்தது...
"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப் போகிறது பார்"
என்றபடி பாலத்தின் மீது ஏறி
நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம்
மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.
"பார்த்தாயா என் மாமனின் (கண்ணன்) சக்தியை? உங்கள்
இராமரால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லையே" என்று
கேலிசெய்தார் அர்ச்சுனன்.
"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன்
கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"
"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", என்ற
அந்தணரின் குரலைக் கேட்டுத் திரும்பினால், அங்கே
விஷ்ணு நின்று கொண்டிருந்தார்.
"கர்வம் தோன்றும் போது நம் கடமையும் பொறுப்புகளும்
மறந்து விடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு
அவதாரங்கள்தான் இராமனும், கண்ணனும்...அப்படியிருக்க
இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம்.
இருவருடைய பக்தியும் அளவு கடந்தது, சந்தேகமேயில்லை.
ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்து விட்டீர்கள்"
என்றார் விஷ்ணு.
இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்.
அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில்
இருந்து கொண்டு தன் வாழ்நாள் மட்டும் சேவை செய்தார்.
பழமும் இல்லை தோலும் இல்லை
அக்பர் அரசியாருடன்
உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும்
பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக
வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்ட பின் இலையில்
இருந்த அனைத்து வாழைப்பழங்களையும் சாப்பிட்டுவிட்டு
அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து
விட்டார்.
அப்போது அக்பரிடம்
முக்கியமான செய்தி ஒன்றினைக் கூறுவதற்காக பீர்பால்
அங்கு வந்தார்.
"பீர்பால்,
இப்பொழுதுதான் உங்களை நினைத்தேன், நீங்களே
வந்துவிட்டீர்கள். இங்கே பாருங்கள் இலையில் வைத்த
அனைத்து வாழைப்பழங்களையும் அரசியார்
சாப்பிட்டுவிட்டார்." என்றார் கேலியாக.
அக்பரின் பேச்சைக்
கேட்ட பீர்பால் சிரித்துக் கொண்டே, "அரசே, அரசியாரின்
இலையில் இருக்கும் தோல்களைப் பார்க்கும் போது எல்லாப்
பழங்களையும் அவரே காலி செய்திருக்கிறார் என்று
தெரிகிறது" என்றார்.
"அப்படி கூறுங்கள்
பீர்பால், எனக்கு ஒரு பழத்தைக் கூட வைக்காமல் அவளே
தின்று தீர்த்து விட்டாள்." என்றார் அக்பர்.
"அரசே மன்னிக்க
வேண்டும். அரசியார் பழங்களை மட்டும் தின்றுவிட்டுத்
தோலை இலையிலேயே வைத்து விட்டார். ஆனால் தாங்களோ
பழத்தின் தோலைக்கூட விடாமல் சேர்த்து சாப்பிட்டு
விட்டீர்களே. உங்கள் இலையில் தோல் ஒன்றைக்கூட
காணோமே..." என்றார் பீர்பால்.
பீர்பால் கூறியதைக்
கேட்டு அரசியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
"தாங்கள் கூறுவது உண்மைதான் பீர்பால். நல்லவேளை என்
இலையில் இருந்த பழத் தோல்களையும் அரசர் சாப்பிடாமல்
விட்டு வைத்தாரே!" என்று அரசியார் கிண்டலாகக்
கூறியதும் அக்பருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல்
திகைத்து நின்றார்.
அவனும் மாறிவிட்டான்.
அரசன் ஒருவன் தன்
அமைச்சனோடு நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே
வந்தான்.
வழியில் உழவன் ஒருவன்
மண்வெட்டியால் நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவன்
காலருகே பெரியபாம்பு ஒன்று படம் எடுத்து நின்று
கொண்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி
அடைந்த அரசன், "உழவனே, உன் அருகே கொடிய பாம்பு படம்
எடுத்துக் கொண்டிருக்கிறது. தப்பித்து ஓடு" என்று
உரத்த குரலில் கத்தினான்.
ஆனால் அவனோ எதுவுமே
நடக்காதது போலத் திரும்பிப் பார்த்தான். படம்
எடுத்துக் கொண்டிருந்த அந்தப்பாம்பை அச்சமின்றித் தன்
கையில் பிடித்துத் தூக்கி எறிந்தான்.
வியப்படைந்த அரசன்,
"உழவனே, கொடிய நஞ்சுடைய பாம்பு அது. அதை நீ பிடித்த
போது உன்னைக் கொத்தியிருந்தால் உன் உயிர்
போயிருக்கும். எப்படியோ தப்பிவிட்டாய்." என்றான்.
"அரசே! இந்த நிலத்தில்
உழும்போது எத்தனையோ பெரிய ஆபத்துகளைச் சந்தித்து
இருக்கிறேன். அந்த ஆபத்துகளுடன் ஒப்பிடும் போது இது
ஒன்றும் பெரிய ஆபத்தாகத் தெரியவில்லை." என்று
சாதாரணமாகச் சொன்னான்.
"கொடிய பாம்பு
கடிப்பதை விட பெரிய ஆபத்து இங்கே என்ன உள்ளது?" என்று
கேட்டான் அரசன்.
"அரசே! இந்த நிலத்தில்
நான் நாள் முழுவதும் உழைக்காவிட்டால் என் குடும்பம்
பசியால் வாட நேரிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல்
இரவும் பகலும் இங்கு உழைக்கிறேன். இந்த பாம்புகளுக்கு
அஞ்சினால் நான் வாழ்க்கை நடத்த முடியாது." என்றான்.
இதைகேட்டு மகிழ்ந்த
அரசன்," அமைச்சரே இவனுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய
வேண்டும். என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.
"வளமான நிலங்களை
இவனுக்கு அளியுங்கள். இந்த ஊரிலேயே இவனைப் பெரும்
செல்வந்தனாக்குங்கள்" என்றார் அமைச்சர். அரசனும் அந்த
உழவனுக்கு அதிகமான நிலங்களைப் பரிசாக வழ்ங்கினான்.
சில ஆண்டுகள் கழிந்தன.
அரசனும் அமைச்சரும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள்.
ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த அந்த உழவன்
அவர்களை வணங்கினான் அரசன்.
அவன் கையில் பெரிய
கட்டுப் போட்டிருப்பதைக் கண்ட அரசன்,"உன் கையில்
கட்டுப் போட்டிருக்கிறாயே? ஏன்?" என்று கேட்டான்.
"அரசே ஒரு முள் என்
கையைக் கீறிவிட்டது. அது பெரிய புண்ணாகிவிட்டது.
மருத்துவர் காயத்திற்குக் கட்டுப்போட்டு ஒரு வாரம்
எந்த வேலையும் செய்யாமல் என்னை ஓய்வெடுக்கச்
சொல்லியிருக்கிறார்" என்றான் அவன்.
வியப்படைந்த அரசன்,
"அமைச்சரே, அன்று இவன் கொடிய பாம்பிற்கு அஞ்சவில்லை.
அதைக்கையில் பிடித்துத் தூக்கி எறிந்தான். ஆனால் இன்று
ஒரு முள் குத்தியதற்காகக் கையில் கட்டு போட்டுக்கொண்டு
ஓய்வெடுக்கிறான். இந்தத்தலைகீழ் மாற்றத்தை என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லையே?" என்றான்.
"அரசே! அன்று அவன்
ஏழை. உழைத்துப் பிழைத்தான். அதனால் அவன் பாம்பிற்கு
அஞ்சவில்லை. இன்றோ அவன் செல்வந்தன். உழைப்பின்றி
இன்பத்தை அனுபவித்து வருகிறான். காலமும் சூழ்நிலையும்
மாறும்போது அவனும் மாறிவிட்டான். " என்றார் அமைச்சர்.
விடை சொன்னால் உயிர்
பிழைக்கும்.
சூதாட்டத்தில்
துரியோதனனிடம் நாட்டை இழந்த பஞ்சபாண்டவர்கள் பதினான்கு
ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டியிருந்தது. காட்டில்
திரிந்த அவர்களுக்கு ஒரு சமயம் தண்ணீர் கிடைக்காமல்
கடுமையான தாகம் ஏற்பட்டது.
நகுலனைப் பார்த்து
மூத்தவனான தருமன்," எங்கேனும் சென்று தண்ணீர் கொண்டு
வா" என்றான்.
பல இடங்களில் அலைந்த
நகுலன் ஒரு இடத்தில் பளிங்கு போல் நீர் நிறைந்த பொய்கை
ஒன்று கண்ணில்பட , அதிலிருந்த தண்ணீரைக் கைகளால்
அள்ளிக் குடிக்க முயன்றான்.
"என் கேள்விகளுக்குப்
பதில் சொல். பிறகு தண்ணீரைக் குடிக்கலாம்" என்று குரல்
கேட்டது.
சுற்றிலும் பார்த்தான்
அவன். யாரும் அவன் கண்களுக்குஹ் தென்படவில்லை.
அந்தக்குரலைப் பொருட்படுத்தாமல் தண்ணீரை அள்ளிக்
குடித்தான். அங்கேயே இறந்து விழுந்தான்.
நகுலன் திரும்பாததைக்
கண்ட தருமன் அடுத்து சகாதேவனை அனுப்பினான். அவனும்
மாயக்குரலை மதிக்காமல் இறந்தான்.
அடுத்தடுத்து வந்த
அர்ச்சுணனுக்கும், வீமனுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டது.
தண்ணீர் கொண்டுவரச்
சென்ற தம்பிகள் நால்வரும் திரும்பாததைக் கண்ட தருமனும்
அந்தப் பொய்கையை அடைந்தான். அங்கே தம்பிகள் நால்வரும்
இறந்து கிடப்பதைக் கண்டான்.
தம்பியரைப் பிரிந்த
துக்கம் ஒரு பக்கம். தாங்க முடியாத தாகம் ஒரு பக்கம்.
கைகளால் தண்ணீரை அள்ளிப் பருகப் போனான்.
"தருமா, நான் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் தராமல் தண்ணீரை அள்ளிக் குடித்த
உன் தம்பிகள் நால்வரும் மாண்டனர். நீ என்
கேள்விகளுக்குப் பதில் அளித்தால் தண்ணீரைக்
குடிக்கலாம். உன் தம்பிகள் நால்வரையும் உயிருடன்
திரும்பப் பெறலாம்" என்ற குரல் ஒலித்தது.
"கேள்விகளைக்
கேளுங்கள். முடிந்தவரை பதில் சொல்கிறேன்" என்றான்
தருமன்.
அந்தக் குரல் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அளித்தான் தருமன்.
அவன் தம்பிகளும் உயிர் பெற்றனர்.
அதில் ஒரு கேள்வி.
"இந்த உலகில் விந்தையான நிகழ்ச்சி எது?"
அதற்குத் தருமன் தந்த
பதில். "நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாள்தோறும்
சாகக்கண்டும் நாம் மட்டும் நிலையாக வாழப் போவதாக
நினைக்கிறோமே. இதுதான் விந்தையான செயல்."
யார் அறிவாளியென்று
தெரியுமா?
அந்தக்காலத்தில் ஒரு
சிறந்த வீரன் என்றால் அவன் அனைத்து ஊர்களுக்கும்
சென்று அங்கிருக்கும் சிறந்த வீரர்களை வெற்றி கொள்ள
வேண்டும். இதுபோல் சிறந்த அறிவாளி என்று சொல்பவர்களும்
அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த
அறிவாளிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியதி
இருந்தது.
இப்படித்தான் ஒரு
அறிவாளி 99 ஊர்களில் இருந்த அறிவாளிகளிடம்
போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். கடைசியாக ஒரு
ஊரில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த
ஊருக்குச் சென்ற அவர், "என்னைப் பற்றிச் சொல்ல
வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னை
எதிர்த்துப் போட்டியிட வந்திருப்பவர் அவரைப்பற்றி
அறிமுகம் செய்யலாம்." என்றார்.
எதிர்த்துப் போட்டியிட
வந்தவன் அவனைப்பற்றி அறிமுகம் செய்து விட்டு,
"தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக எங்கள்
நாட்டில் ஒரு போட்டி நடத்தினார்கள். அந்தப் போட்டியில்
கடைசியாக வரும் மடையனை உங்களுடன் போட்டியிடச் செய்வது
என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மடையனான என்னைப்
போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்." என்றான்.
அறிவாளியான அவருக்கு
என்னவோபோல் ஆகிவிட்டது. இருந்தாலும் நாம் எளிதில்
வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டார்.
அறிவாளியான அவர்,
"உலகின் நடுப்பகுதி எது?" என்று கேட்டார்.
உடனே அவன்," அதோ அந்த
மரத்தின் அருகில் இருக்கும் என் கார்தான் உலகின்
நடுப்பகுதி" என்று அங்கிருந்த கழுதையைக் காட்டினான்.
"கார் எங்கே
இருக்கிறது? அங்கே கழுதைதானே நிற்கிறது." என்றார்
அவர்.
"ஆம். அதுதான் நான்
வந்த கார். அது நிற்கும் இடம்தான் உலகின் நடுப்பகுதி"
என்றான்.
அந்த அறிவாளிக்கு
கோபம் வந்தது. உடனே, "அதுதான் உலகின் நடுப்பகுதி என்று
நிரூபித்துக்காட்ட முடியுமா?" என்று கத்தினார்.
"என்னால்
நிரூபித்துக்காட்ட முடியும். ஆனால், அதற்கு முன்பு அது
உலகத்தின் நடுப்பகுதி இல்லை என்று நீங்கள்
நிரூபித்துக்காட்ட வேண்டும்." என்றான் அவன்.
அறிவாளியான அவருக்கு
இவன் பேச்சே வேறுவிதமாக இருக்கிறதே என்று நினைத்துக்
கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.
" இந்த வானத்தில்
எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறது என்று உன்னால்
சொல்ல முடியுமா?"
உடனே அவன், " என்னுடைய
கழுதையின் உடம்பில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அவ்வளவு
நட்சத்திரங்கள் இருக்கின்றன." என்றான்.
"இதை
நிரூபித்துக்காட்ட முடியுமா?" என்றார் அவர்.
"உங்களுக்கு
சந்தேகமிருந்தால் நீங்கள் எண்ணிப்பார்த்து
சரிபார்த்துக் கொள்ளுங்கள்." என்றான்.
இவனை நாம் போட்டியில்
வெற்றிகொள்ள முடியாது என்று நினத்த அறிவாளி "நான்
தோற்றுவிட்டேன். இன்று முதல் நீதான் அறிவாளிகளில்
முதலாவது ஆள்" என்றார்.
அவன், "இந்த உலகில்
பதில் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை.
பதில் தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை.
தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். தான்
மட்டும்தான் அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை
நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
"என்றான்.
அறிவாளிக்கு யாரோ
தலையில் ஓங்கிக் குட்டியது போலிருந்தது.
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
ஒரு பெரியவர்
அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக்
கொண்டிருந்தார். அங்கே ஒரு மிடுக்கும், சொல்
துடுக்கும் உடைய மாணவன் சென்றான்.
"ஐயா! பெரியவரே! ஏன்
உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து
உறங்கலாமே'' என்றான்.
"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ.
படித்தவன். நான் மூடன் இல்லை. நூலறிவு படைத்தவன்.
கடவுள், கடவுள் என்று நீங்கள் கூறுவது மூடத்தனம்.
கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''
"தம்பீ! காண முயலுகின்றேன்.''
"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''
"இல்லை.''
"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால்
நுகர்ந்திருக்கின்றீரா?''
"இல்லை.''
"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று
கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டதில்லை,
மூக்கால் நுகர்ந்ததில்லை; கையால் தொட்டதில்லை; காதால்
கேட்டதில்லை; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து
கொண்டு இந்த அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக்
கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உமக்கு வயது
முதிர்ந்திருந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்
போன்றவர்களைக் காட்சிச் சாலையில்தான் வைக்க வேண்டும்.
கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''
"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன
இருக்கின்றது?''
"தேன் பாட்டில்.''
"தேன் இனிக்குமா, கசக்குமா?'
"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்காக
இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா
கசக்குமா என்று கேட்கின்றீரே! உணவுப் பொருள்களிலேயே
தேன் முக்கியமானது. இது அருந்தேன், இதை அருந்தேன்
என்று எவன் கூறுவான்? அதற்காகத்தான் இருந்தேன்
என்பான். தேன் தித்திக்கும். இதை எல்லோரும் ஒப்புக்
கொள்வார்கள்.''
"தம்பீ! தித்திக்கும் என்றாயே, அந்த இனிப்பு கறுப்பா,
சிவப்பா? சற்று விளக்கமாகக் கூறு! நீதான் நன்கு
படித்த அறிஞனாச்சே!.''
மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா
சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது
என்று திக்கித் திணறினான்.
"ஐயா! தேனின் இனிமையை எப்படச் சொல்வது? இதைக்
கண்டவனுக்குத் தெரியாது! உண்டவன்தான் உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்த
மருத்துவப் பொருளாகவும் உணவாகவுமுள்ள தேனின் இனிமையையே
சொல்ல முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றாயே? ஞானப்
பொருளாக, அனுபவப்பொருளாகவும் விளங்கும் இறைவனை
அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
-என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
மாணவன் வாய் சிறிது அடங்கியது.
"பெரியவரே! எனக்குப்
பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன்
பேசுகிறேன்.''
"தம்பீ! சற்று நில். பசி என்றாயே, அதைக் கண்ணால்
கண்டிருக்கின்றாயா?''
"இல்லை.''
"என்ன தம்பீ! உன்னைப் படித்த அறிஞன் என்று நீயே கூறிக்
கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால்
நுகர்ந்ததில்லை, கையால் தொட்டதில்லை; அப்படியிருக்க
அதை எப்படி நம்புவது? பசி பசி என்று சொல்லி உலகத்தை
ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று இல்லவே இல்லை. இது
சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று
கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி
என்ற ஒன்று அனுபவப் பொருள். அது கண்ணால் காணக்
கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அனுபவப் பொருள்.
அதைத் தவம் செய்து மெய்யுணர்வினால் உணர்தல்
வேண்டும்.''
மாணவன் உடம்பு வியர்த்தது, தலை சுற்றியது. பெரியவர்
கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு
சந்தேகம்! கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''
"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி,
தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''
"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா
நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை
எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை
மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த
அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான்
இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில்
ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா?
காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால்
மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும்
அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய்.
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''
"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?''
"என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''
"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''
"ஆம்! தெரிகின்றன.''
"முழுவதும் தெரிகின்றதா?''
அவன் சற்று
எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது''
என்றான்.
"தம்பீ! உன் உடம்பின்
பின்புறம் தெரிகின்றதா?''
மாணவன் விழித்தான்.
"ஐயா! பின்புறம் தெரியவில்லை.''
"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று
பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை
என்கின்றாயே. சரி, முன்புறம் முழுவதுமாவது
தெரிகின்றதா?''
"முன்புறம் முழுவதும்
தெரிகின்றதே.''
"அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப்
பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.''
"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.''
"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.''
"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம்
தெரியவில்லை!'' என்றான்.
"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த
உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும்
கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த
உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய
வேண்டும், நீயே சொல்.''
"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு
இருபுறங்களும் தெரியும்.''
"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.''
"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். ''
"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில்
விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக்
காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி
திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள்,
குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே
வடிவான இறைவனைக் காணலாம்.
"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக்
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும்
குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''
அந்த மாணவன் தன் தவறை
உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.
-திருமுருக
கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை.
நம்பிக்கைத் துரோகியாகலாமா?
காட்டு வழியே சென்று
கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனைக் கண்ட புலி ஒன்று
துரத்தியது.
தலை தெறிக்க ஓடத்
துவங்கினான். மூச்சு இறைத்தது. அதிக தூரம் ஓட முடியாது
என்பதால் அங்கிருந்த ஆலமரத்தைப் பார்த்து அதில் ஏறத்
துவங்கினான். பாதி தூரம் ஏறிய அவன் அந்த மரத்தின்
மேலிருந்த கரடியைப் பார்த்தான். பின் மேலே ஏறத்
தயங்கினான்.
கரடி, "பயப்படாதே,
மனிதா! மேலே ஏறி வா. உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்"
என்றது.
வேறு வழியில்லாததால்
அந்த வழிப்போக்கனும் மரத்தில் ஏறி ஒரு கிளையில்
அமர்ந்து கொண்டான்.
புலிக்கு மரமேறத்
தெரியாததால் மரத்தடியில் நின்று சீறிக் கொண்டிருந்தது.
கரடி, " மனிதா, நிறைய
நேரம் விழித்திருக்க முடியாது. முதலில் நீ தூங்கு.
நான் காவலிருக்கிறேன். பிறகு நான் தூங்குகிறேன். நீ
காவல் காக்கலாம்" என்றது.
கீழேயிருந்த புலி,
"கரடியே! மனிதன் நம் இருவருக்கும் பகைவன். உன்னை
அடித்து வித்தை காட்டி சம்பாதிப்பவன். அவனைக் கீழே
தள்ளி விடு. இருவரும் சேர்ந்து அடித்துச்
சாப்பிடலாம்." என்றது.
"பாவங்களில் கொடிய
பாவம் நம்பிக்கைத் துரோகம். அதை நான் செய்ய மாட்டேன்."
என்று உறுதியாகக் கூறி விட்டது கரடி.
பாதி இரவில்
வழிப்போக்கனை எழுப்பிய கரடி,"எனக்குத் தூக்கமாக
வருகிறது. நான் சிறிது நேரம் தூங்கிக் கொள்கிறேன்.
நான் உருண்டு விழுந்து விடாமல் பார்த்துக் கொள்" என்று
சொல்லி விட்டுத் தூங்கியது.
மனிதனிடம் புலி, "நான்
உன்னைத் துரத்தி வந்தது உண்மைதான். நான் மிகவும்
பசியோடிருக்கிறேன். கரடிக்கு வயிறு மந்தமாக இருப்பதால்
தூங்கி எழுந்ததும் உன்னைச் சாப்பிட்டு விடப்
போகிறதாம். நீ முந்திக் கொண்டு அதைத் தள்ளிவிடு. கரடி
எத்தனை நாள் பசியோடிருக்கும்? அது உன்னைத் தின்று
விடும். அதற்கு முன்பு புத்திசாலியாக அதைத் தள்ளி
விட்டு நீ பிழைத்துக் கொள்" என்றது.
மனிதனுக்கு புலி
சொல்வது சரியென்று தோன்றியது.
அவன் கரடியைப்
பிடித்துத் தள்ளினான். நல்ல வேளை! கரடியின் பெரிய உடல்
ஒரு அடர்ந்த மரக்கிளையில் சிக்கியது. நிலைமையைப்
புரிந்து கொண்டது கரடி.
"நன்றி கெட்ட மனிதனே,
புலியின் சாகசப் பேச்சில் மயங்கி உன்னைக் காப்பாற்றிய
என்னைப் புலிக்கு இரையாக்கத் தெரிந்தாயே... பொழுது
விடியும்வரை உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். புலி
போனதும் இறங்கி ஓடிப் போய் விடு" என்றபடி மேலே ஏறி
வந்து அமர்ந்தது அந்தக் கரடி.
வழிப்போக்கன்
அவமானத்தால் தலை குனிந்தான்.
காலையில் புலி அந்த
இடத்தை விட்டுச் சென்றதும் அவனும் மரத்தை விட்டு
இறங்கிச் சென்றான்.
இப்படித்தான்
நம்பிக்கைத் துரோகம் செய்வது சில மனிதர்களுக்கு
இயல்பாகப் போய் விட்டது. ஆனால் அவர்களுக்கு
மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட இருப்பதில்லை.
ஆயிரமாயிரமாகக் கொட்டிக்
கொடுத்தாவது...
முருகன் கண்ணுச்சாமி
வீட்டில் அனைத்துக் கணக்குகளையும் பார்த்து அவரது
நிர்வாகியாக வேலை செய்து வந்தான்.
கண்ணுச்சாமியின்
வீட்டில் அவன் எந்த வேலையாக இருந்தாலும் செய்தான்.
அந்த வேலை அவனுடையதாக இல்லாவிட்டாலும் கூட தன்
முதலாளியின் பெயரில் அவன் வைத்திருந்த நம்பிக்கையில்
அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில்
இழுத்துப் போட்டு செய்வான்.
அவனுடைய உழைப்பில்
முதலாளி முன்னுக்கு வந்து கொண்டிருந்தார்.
முதலாளியும் முருகனின் வேலையால் தான் முன்பிருந்ததை
விட மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டிருந்ததை
நினைத்து மகிழ்ந்திருந்தார். கண்ணுச்சாமியின்
முன்னேற்றத்திற்கு முருகனின் உழைப்பும், அறிவும்தான்
காரணம் என்று ஊரிலிருக்கும் பலரும் பேசத் துவங்கினர்.
இந்நிலையில் முருகனை
அழைத்தார். "என்னிடம் நிறைய பேர் வேலை பார்த்தாலும்
என்னுடைய நம்பிக்கைக்குரிய ஆளாக நீ மட்டுமே
இருக்கிறாய். இனி நான் செய்யும் வேலை அனைத்தையும் நீயே
பார்க்க வேண்டும். உனக்கு முதலாளி போன்ற அந்தஸ்து
அளிக்கிறேன். " என்றார்.
தன் மேல் இவ்வளவு
நம்பிக்கை வைத்திருக்கிறாரே என்று முருகனும் மகிழ்ச்சி
அடைந்தான். நேரம் பார்க்காமல் மேலும் கூடுதலாக பல
வேலைகளைத் தேடித் தேடிச் செய்யத் துவங்கினான். முருகன்
தனது குடும்பத்தைப் பற்றியோ தனது வீட்டைப் பற்றியோ
நினக்காமல் கண்ணுச்சாமியின் முன்னேற்றத்திலேயே கண்ணும்
கருத்துமாக இருந்தான்.
கண்ணுச்சாமியின்
வேலைகளை முருகனே பார்த்துக் கொண்டதால் கண்ணுச்சாமியின்
கவனம் வேறு பக்கம் திரும்பியது. தன் உதவிக்கு
வைத்திருந்த சிலருடன் சேர்ந்து தவறான பாதையில் செல்லத்
துவங்கினார். அவர்களின் சொல்படி தனது பாதையை மாற்றிக்
கொண்டு நடக்கத் துவங்கினார்.
அவர்களும் "முதலாளி
நீங்க இவ்வளவு முன்னேறியதற்கு முருகன் தான் காரணம்
என்று இந்த ஊரில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இது
உங்களுக்கு நல்லதில்லை. உங்களைப் பற்றிப் பேசாமல்
உங்களிடம் வேலை பார்க்கும் முருகனைச் சொல்கிறார்களே.
அவனை வேலையை விட்டு எப்படியாவது நிறுத்தி விடுங்கள்.
அப்போதுதான் இந்த சொத்துக்களை நீங்க சம்பாதித்தது
என்பார்கள். மேலும் உங்கள் சொத்தை அவனுடைய சொத்து
என்று சொல்வதற்கு முன்பு அவனை வேலையை விட்டு அனுப்பி
விடுங்கள்" என்று கண்ணுச்சாமியிடம் தூபம் போட்டு
விட்டனர்.
கண்ணுச்சாமி நிறைய
படித்தவராக இருந்தாலும் உண்மையை உணரும் தன்மை அவரிடம்
இல்லை. தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று
இந்த ஊரே சொல்லிக் கொண்டிருக்கும் முருகனை வேலையை
விட்டு நிறுத்தி விட வேண்டுமென்று முடிவு செய்தார்.
முருகனைத் தான் வேலையை விட்டு அனுப்பி விட்டால் ஊரில்
அவனுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்து விடும், தனக்கும்
கெட்ட பெயராகி விடும் என்பதால் முருகனே வேலையை
விட்டுப் போகும்படி செய்ய வேண்டுமென்று முடிவு
செய்தார்.
மறுநாள் தனது
உதவியாளராய் இருந்தவர்களுக்கு முருகனைக் காட்டிலும்
அதிகமான சம்பளம் அளிக்கத் துவங்கினார்.
முருகன் தன்
முதலாளியிடம் சென்று," அய்யா, உங்கள் வேலை அனைத்தையும்
நான் பார்க்கிறேன். எனக்கு அதற்கு தனியாக சம்பளம்
எதுவும் வழங்கவில்லை. மேலும், பத்து வருடங்களுக்கு
மேலாக வேலை செய்து வரும் எனக்கு குறைவான சம்பள
உயர்வும் வேலை எதுவும் செய்யாமல் உங்களுடன் இருக்கும்
சிலருக்கு மட்டும் என்னைக் காட்டிலும் அதிக சம்பளம்
தருகிறீர்களே? அதுவும் அவர்கள் வேலைக்குச் சேர்ந்து
நான்கு வருடங்கள் கூட ஆகவில்லையே..."என்று கேட்டான்.
"அவங்க
காலையிலிருந்து இரவு வரை என்னுடன் இருக்கிறார்கள்.
என்னுடனேயே இருக்கும் அவர்களுக்கு நான் இன்னும்
அதிகமாகக் கூட சம்பளம் தருவேன். அதையெல்லாம் நீ
கேட்கக் கூடாது. போ... போ..." என்று விரட்டினார்.
தனது சொந்த
வேலையெல்லாம் தவிர்த்து விட்டு முதலாளியின்
முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபட்ட தன்னை இப்படி
அவமானப்படுத்தி விட்டதை நினைத்தபடியே வீட்டிற்குச்
சென்ற முருகனுக்கு அன்றிரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
மறுநாள் முதலாளியைச்
சந்தித்துத் தான் வேலையை விட்டு நின்று விடப் போவதாகச்
சொன்னான்.
அதைப்பற்றி அவர்
சிறிது கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முருகனும்
அந்த வேலையை விட்டு நின்று விட்டான்.
ஊரிலிருப்பவர்கள்
கண்ணுச்சாமியிடம் முருகன் வேலையை விட்டுப் போய்
விட்டது குறித்துக் கேட்ட போது, "நான் அவனுக்கு
முதலாளி அந்தஸ்து கொடுத்திருந்தேன். அப்படியிருந்தும்
அவனாகவேப் போயிட்டான். " என்று சொன்னார்.
முருகனும் தன்னுடைய
உழைப்பு பத்து வருடங்கள் ஒரு முட்டாள்
முன்னேற்றத்திற்காக வீணாகப் போய் விட்டதே என்று
வருத்தப்பட்டு அந்த ஊரிலேயே இருக்கப் பிடிக்காமல்
வெளியூருக்குச் சென்று விட்டான்.
முருகன் பார்த்து வந்த
வேலைகளைப் பார்க்கத் தகுதியான ஆட்கள் இல்லாததாலும்
உதவியாளர்களாக இருந்தவர்கள் காட்டிய வழியில் எல்லாம்
கண்ணுச்சாமி சென்றதாலும் கண்ணுச்சாமி தனது
சொத்துக்களைப் பராமரிக்க முடியாமல் ஒவ்வொரு சொத்தாக,
அனைத்தையும் இழந்து தெருவிற்கே வந்து விட்டார்.
"துவக்கத்திலிருந்து
நம் மேல் நம்பிக்கையுடனும் அனைத்து வேலையையும்
ஆர்வத்துடனும் செய்யும் முருகனை ஊக்கப்படுத்தாமல்
விரட்டி விட்டேனே... அடுத்தவர் பேச்சைக் கேட்டு
அவமானப்படுத்தி அனுப்பி விட்டேனே... அதனால்தான்
என்னுடைய நிலை இப்படி மோசமாகப் போய்விட்டது" என்று
கண்ணுச்சாமி இன்றும் பலரிடம் ஊருக்குள்
புலம்பிக்கிட்டுத் திரிகிறாராம்.
"தகுதியானவர்களை
ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது நம்மை விட்டுப்
போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோல்
தரமில்லாதவர்களை ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது
ஒதுக்கி விட வேண்டும்" என்பது தெரியாமல் பல
கண்ணுச்சாமிகள் தங்களையும் இழந்து, தங்கள்
சொத்துக்களையும் இழந்து பைத்தியங்களாய்த் திரிவதை
உங்கள் ஊரிலும் பார்க்கலாம்.
முட்டாள் மனிதர்களுக்கு
பணம்தான் பெரிசு
தந்தையும் மகனும்
காட்டு வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
களைப்படைந்த அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வு
எடுத்தார்கள்.
சிறுவனான மகன் கையில்
பளபளக்கும் நாணயம் ஒன்றை வைத்திருந்தான். அதைத்
தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
"மகனே உன் கையில் உள்ள
பணத்தைத் தொலைத்து விடாதே. இந்த உலகத்தில் மிகவும்
உயர்ந்தது பணம்தான். பணத்தால் எதையும் செய்ய முடியும்.
ஒரு நாட்டை வெல்ல முடியும். பெரிய அரண்மனையைக் கூட
கட்ட முடியும். வீரர்களை உன் கட்டளைக்குப் பணிய வைக்க
முடியும்." என்றார் அவன் தந்தை.
அருகிலிருந்த புதரில்
ஒளிந்திருந்த நரி ஒன்று இதைக் கேட்டது.
அந்த மரத்தினருகே
வந்தது. பளபளக்கும் நாணயம் தரையில் கிடப்பதைப்
பார்த்தது. நாணயத்தை வாயில் கவ்வியது.
உடனே அதற்கு அந்த
காட்டிற்கே அரசனாகி விட்டது போல் ஒரு எண்ணம் வந்து
விட்டது. அருகிலிருந்த மணல் மேடு ஒன்றில் ஏறி கால்
மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டது. மகிழ்ச்சியுடன்
ஊளையிட்டது.
அந்த வழியே வந்த கீரி
ஒன்று, "நரியாரே, என்ன மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?
உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டது.
"நான் எப்பொழுது
வேண்டுமானாலும் இந்தக் காட்டிற்கு அரசனாக முடியும்.
இங்கு பெரிய அரண்மனை ஒன்றைக் கட்ட முடியும்.
நாட்டிலுள்ள மனிதர்கள் கூட எனக்குக் கீழ் படிந்து
நடப்பார்கள். இங்குள்ள சிங்கம், புலி, யானை எல்லாம்
எனக்கு எம்மாத்திரம்? அதனால் மகிழ்ச்சியாக உள்ளேன்."
என்று பெருமை பேசியது.
இந்த நரிக்குப்
பைத்தியம் ஏது பிடிக்கவில்லை. ஏதோ சிறந்த ஆற்றல் ஒன்று
கிடைத்திருக்கிறது. அதனால்தான் இப்படி பேசுகிறது என்று
நினைத்தது கீரி.
இந்தச் செய்தியை அது
மான்களிடமும் ஓநாய்களிடமும் சொல்லியது. அப்படியே
இந்தச் செய்தி முயல்களிடமும், கரடிகளிடமும் சென்று
காடு முழுவதும் பரவி விட்டது.
அனைத்து விலங்குகளும்
கூட்டம் கூட்டமாக வந்து நரிக்கு வணக்கம் செலுத்தியது.
தற்பெருமையோடிருந்த
நரியோ எதற்கும் பதில் வணக்கம் செலுத்தாமல் அவைகளைக்
கண்டும் காணாததைப் போல் இருந்தது.
இதனால் எரிச்சலடைந்த
கரடி ஒன்று, " நரியே, உன்னை நோக்கி யானை ஒன்று கோபமாக
வருகிறது. உன் ஆற்றலைப் பயன்படுத்தி அதை வணக்கம் செய்ய
வை. பார்ப்போம்." என்றது.
இதைக் கேட்ட நரி
பலமாகச் சிரித்தது.
"என்னைப் பார்த்து
வணக்கம் செலுத்தாத அந்த யானை என்னிடம் கதறி அழுது
மன்னிப்பு கேட்கப் போகிறது. என் ஆற்றலை இப்போது
பார்க்கப் போகிறீர்கள்." என்று வீரம் பேசியது.
யானை அதை நெருங்கியது.
மற்ற விலங்குகள்
"அங்கு என்ன நடக்கப் போகிறது?" என்று அறிய ஆவலுடன்
ஒதுங்கிப் பார்த்தன.
எழுந்து நின்ற நரி
அந்த நாணயத்தை யானையின் முன் காட்டியது.
"யானையே, என்னிடம்
உள்ளதை நன்றாகப் பார். பளபளக்கும் இதற்கு பணம் என்று
பெயர். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நான் கட்டளையிடுகிறேன். அங்கேயே நில்" என்று அதிகாரத்
தோரணையுடன் சொன்னது.
ஆனால் யானை அதைக்
காதில் வாங்கவேயில்லை. தன் துதிக்கையால் அந்த நரியைப்
பிடித்துத் தூக்கி வீசி எறிந்தது.
புதர் அருகே சென்று
விழுந்த நரி மயக்கமாகிக் கிடந்தது.
அங்கு வந்த குரங்கு
ஒன்று அந்த நாணயத்தைப் பார்த்தது.
"விலங்குகளே, இதற்குப்
பணம் என்று பெயர். முட்டாள் மனிதர்கள்தான் இதற்கு
மதிப்பு தருவார்கள். இதை வைத்து எதையும் செய்து
விடலாம் என்று அந்த முட்டாள் மனிதர்கள்தான்
நினைக்கிறார்கள்"
"முட்டாள் மனிதன்
ஒருவனின் பேச்சை அப்படியே நம்பி விட்டது இந்த நரி.
இதற்கு நல்ல பாடமும் கிடைத்தது." என்றது.
நரியின்
முட்டாள்தனத்தை நினைத்துச் சிரித்தபடியே அனைத்து
விலங்குகளும் அங்கிருந்து கலைந்து சென்றன.
வெற்றி யாருக்கு?
இந்திரப் பிரஸ்த
நகரம். இராஜசூர்ய யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருந்தது.
யாகம் முழுமையடைய
வேண்டுமானால் இமயமலையில் தவம் செய்யும் புருஷா மிருகம்
என்கிற ஒரு விலங்கை அழைத்து வர வேண்டும் என்றார்
கண்ணன்.
தருமத்துக்கும்
சிவபக்திக்கும் கட்டுப்பட்ட அந்த மிருகத்தை அழைத்து வர
சிவபக்தனான பீமனே பொருத்தமானவன் என்று யோசனையும்
தெரிவித்தார்.
ஆனால் மனித மாமிசம்
அதற்கு விருப்பமானது என்று எச்சரிக்கையும் செய்தார்.
பீமன் இமயமலைக்குப்
புறப்பட்டான். புருஷா மிருகத்திடம் கண்ணனின்
வேண்டுகோளைச் சொன்னான். புருஷா மிருகமும் ஒப்புக்
கொண்டது. கூடவே ஒரு நிபந்தனையும் போட்டது.
பீமன் முன்னால் நடக்க
வேண்டும், அரை மைல் தள்ளி அந்த விலங்கு பின் தொடரும்.
அரை மைலுக்குள் அது வந்து விட்டால் பீமனை அது
சாப்பிட்டு விடலாம். பீமனும் இதற்கு சம்மதித்தான்.
நடைப் போட்டி
துவங்கியது. பலசாலியான பீமனால் புருஷா மிருகத்தை
வெற்றி கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் தொட்டு
விடும் போலிருந்தது.
புருஷா மிருகம்
சிவபக்தி அதிகமுடையது என்பதுடன் சிவலிங்கத்தைப்
பார்த்தால் அதற்கு பூஜைகள் செய்து விட்டு அதன்
பின்புதான் அதன் வேலையைத் தொடரும் என்பதைக் கேள்விப்
பட்டிருந்த பீமன் ஒரு பை நிறைய சிவலிங்கத்தை எடுத்து
வந்திருந்தான்.
சிவனை மனதில்
தியானித்தபடி ஒரு சிவலிங்கத்தை அங்கு வைத்து விட்டு
ஓடினான்.
வழியில்
சிவலிங்கத்தைப் பார்த்த புருஷா மிருகம் சிவபூஜை
செய்தது.
இப்படியே மிருகம்
தன்னை நெருங்கும் போதெல்லாம். ஒரு சிவலிங்கத்தை அங்கே
வைத்தான். மிருகம் சிவபூஜை செய்து முடிப்பதற்குள்
வெகுதூரம் போய் விடுவான்.
யாகசாலையினை
நெருங்கும் போது கொண்டு வந்திருந்த சிவலிங்கம்
தீர்ந்து விட்டது.
ஒரு காலை
யாகசாலைக்குள் வைத்து விட்ட பீமனின் இன்னொரு காலை
மிருகம் பற்றிக் கொண்டது.
பீமனின் குரல் கேட்டு
எல்லோரும் அங்கு கூடி விட்டனர்.
யாகசாலையில் கால்
வைத்து விட்டதால் தான் வெற்றி பெற்று விட்டதாக பீமன்
கூற, வெளியில் இருந்த காலைப் பிடித்து விட்டதால்
வெற்றி தனக்கே என்று அந்த மிருகமும் வாதிட்டது.
இதற்கான தீர்ப்பு அளிக்கும் உரிமை தருமரிடம் வந்தது.
தருமர், பீமனின் ஒரு
காலை மிருகம் பிடித்து விட்டதால் பீமனின் பாதி உடலை
அதற்கு இரையாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
தருமரின் நேர்மையான
இத்தீர்ப்பைக் கண்டு வியந்த அந்த புருஷா மிருகம் பீமனை
விட்டு விட்டது. யாகம் முழுமையடையவும் ஒத்துழைத்தது.
நம் எல்லோருக்கும் நான்கு
மனைவிகள்.
ஒரு
பணக்கார
வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில்
நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை
நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை
அவளுக்குக் கொடுத்தான். மூன்றாவது மனைவியையும்
நேசித்தான். அவளைப் பற்றி எப்பொழுதும் தன்னுடைய
நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
எனினும் அவள் வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள் என்கிற
பயம் அவனுக்கு இருந்தது. அவன் தன்னுடைய இரண்டாவது
மனைவியையும் நேசித்தான். அவனுக்கு ஏதாவது பிரச்சனைகள்
ஏற்பட்டால் அவன் எப்பொழுதும் அவளின் உதவியை நாடுவான்.
அவளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுவாள். வணிகனின்
முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத்
திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும்,
வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக
நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன்
திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான்.
அவன் இறக்கப்
போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தன் நான்காவது
மனைவியை அழைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக்
கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல்
முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள்
கூறிய பதில் கூர்மையான கத்தியைப் போல் வணிகனின்
இதயத்தைக் குத்தியது.
கவலையடைந்த அவன் தன்
மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக்
கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு
இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து
கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக்
கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவன் தன்
இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக்
கேட்டான். அவளோ, "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த
முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது.
வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம்
செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது
போலிருந்தது.
அவன் கண்களை மூடினான்.
அப்பொழுது "நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே
சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என்று ஒரு
சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன்
கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி
நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால்
மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான்
நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க
வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த
வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்
இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி
நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக
அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும்
போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று
விடும்.
2. மூன்றாவது மனைவி
நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த
பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி
என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும்.
எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும்,
அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன்
வருவார்கள்.
4. நம்முடைய முதல்
மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும்
சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு
விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
இப்படித்தான்
வாழ்க்கையின் உண்மை அறியாமல் தவிக்கிறார்கள்.
நன்றி:
tamilgood.com
உழைப்பவர்களைச் சுரண்டிப்
பிழைக்கும்...
வானத்தில்
வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துக்கு ஒரு பூனையின்
உதவி கோரும் குரல் கேட்டதும் அப்படியே கீழே இறங்கி
வந்தது.
அங்கே ஒரு குளக்கரை
ஓரத்தில் சகதியும் சேறுமாக இருந்த இடத்தில் சிக்கிக்
கொண்ட பூனை அதிலிருந்து வெளியேற முடியாமல் கத்திக்
கொண்டிருந்தது.
பூனையை அந்த
ஆபத்திலிருந்து காப்பாற்ற விரும்பியது பருந்து.
உடனே பூனையின் தலயின்
மேல் சற்று உயரமாகப் பறந்தபடி, " பூனையாரே! கவலை
வேண்டாம். எனது கால்களைப் பலமாகப் பிடித்துக் கொண்டால்
உம்மைப் பிடித்தபடி மேலே பறந்து உம்மைக் காப்பாற்றி
விடுகிறேன். " என்றது.
பூனையின் முன்னே
பருந்து தனது கால்களை நீட்டியபடி மேலே பறந்தது.
பருந்தைப் பார்த்த
பூனையின் நாக்கில் எச்சில் ஊறியது.
தான் உயிருக்காகப்
போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தது. பருந்தைப்
பிடித்து அதன் ருசியான சதைக்கறியை தின்றால் எப்படி
இருக்கும்? என்ற எண்ணத்துடன் பருந்தின் காலைப்
பிடிக்காமல் இறக்கையைப் பிடித்துக் கொண்டது.
இதை எதிர்பார்க்காத
பருந்து பூனையின் தவறான எண்ணத்தைப் புரிந்து கொண்டு
தனது கூரிய அலகால் பூனையின் தலையில் ஓங்கிக்
கொத்தியது.
வலி தாங்க முடியாத
பூனை பருந்தின் இறக்கையை விட்டதால் மீண்டும்
சகதிக்குள் விழுந்தது.
பூனையின் பிடியில்
இருந்து விடுபட்ட பருந்து சற்று மேலே பறந்தபடி, "
பூனையாரே, உம்மை ஆபத்து நேரத்தில் காப்பாற்ற வந்த
என்னைக் கொன்று தின்னத் துணிந்த உனக்கு மரணம்
ஒன்றுதான் முடிவு" என்றது.
இந்த உலகில் இந்தப்
பூனையைப் போல், சில மனிதர்கள் தாம் ஆபத்திலிருந்தாலும்
உதவ வந்தவர்களைப் பலியாக்கி விடுகிறார்கள். சில
மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைப்பவர்களைச்
சுரண்டி அவர்கள் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டு
விடுகிறார்கள். இவர்களை எல்லாம் பருந்தைப் போல்
கொத்தித்தான் ஆக வேண்டும்.
Today, there have been 8 visitors (12 hits) on this page!